75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-10-23 20:44 GMT
சேலம், அக்.24-
சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் நடந்த மெகா முகாமில் 75 ஆயிரத்து 363 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சேலத்தில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட 5 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 667 நபர்களுக்கு முதல் தவணையும், 1 லட்சத்து 87 ஆயிரத்து 750 நபர்களுக்கு 2-வது தவணை என மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 417 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 99 ஆயிரத்து 527 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாகவும் மற்றும் தகுதியுள்ள 1 லட்சத்து 88 ஆயிரத்து 347 நபர்கள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் தடுப்பூசி முகாம் நடந்ததால் அசைவம் சாப்பிடுபவர்கள் மற்றும் மது அருந்தும் நபர்கள் யாரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
6-வது மெகா முகாம்
அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று 1,392 மையங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும், சிலர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி போட வந்தவர்கள் முககவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடித்தனர்.
இதனிடையே சேலம் குமாரசாமிப்பட்டி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி மெகா முகாமை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
75 ஆயிரம் பேர்
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 75 ஆயிரத்து 363 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சத்து 24 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 120 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்