கரிக்காப்பட்டியில் கிராம மக்கள் சாலை மறியல்
கரிக்காப்பட்டியில் கிராம மக்கள் சாலை மறியல்;
மேச்சேரி, அக்.24-
ஊராட்சி மன்ற தலைவரின் தந்தை கைது செய்யப்பட்டதை கண்டித்து கரிக்காப்பட்டியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்
ஜலகண்டாபுரம் அருகே கரிக்காப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் தரை பகுதி உடைக்கப்பட்டு குறுக்காக சுவர் எழுப்பும் பணி கடந்த 22-ந் தேதி நடந்தது. அப்போது அங்கு வந்த வார்டு உறுப்பினர்கள் தங்கராஜ், சக்கரவர்த்தி ஆகியோர் அரசு கட்டிடத்தின் தரையை உடைத்து கட்டிட வேலை செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயாவின் தந்தை சின்னதம்பி மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி, ஆறுமுகம், செல்வம் ஆகியோர் சேர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்கராஜ், சக்கரவர்த்தி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தங்கராஜ், சக்கரவர்த்தி ஆகியோர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கைது
இது குறித்த புகாரின் பேரில் சின்னதம்பி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சின்னதம்பி (வயது 50), செல்வம் (45) ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல கரிக்காப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஜலகண்டாபுரம் போலீசில் கொடுத்த புகாரில், கரிக்காப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வீட்டு வரி ரசீது வாங்குவதற்காக சென்ற போது, ஊராட்சி மன்ற தலைவரின் தந்தை சின்னதம்பியை தாக்கினார்கள். மேலும் அங்கு நடந்த இருதரப்பினர் மோதலை தடுத்தோம். அப்போது, எங்களையும் தாக்கினார்கள் என்று கூறி உள்ளனர். அதன் பேரில் வார்டு உறுப்பினர்கள் தங்கராஜ், சக்கரவர்த்தி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் கரிக்காப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயாவின் தந்தை சின்னதம்பி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜலகண்டாபுரம்-சின்னம்பட்டி சாலையில் கரிக்காப்பட்டியில் கிராம மக்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த ஜலகண்டாபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 42 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.