பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-10-23 20:33 GMT
தஞ்சாவூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13-வது வட்ட மாநாடு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இந்திராநகரில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்றுமாலை நடந்தது. இதற்கு வட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் இளங்கோவன் வேலை அறிக்கை வாசித்தார்.
வட்ட பொருளாளர் பலராமன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். நிர்வாகி மதியழகன் வரவேற்றார். மாநாட்டை மாவட்ட தலைவர் கோதண்டபாணி தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
தேர்தல் வாக்குறுதி
மாநாட்டில், தேர்தல் வாக்குறுதியின்படி 2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தமிழகஅரசு அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி பணியாளர், வருவாய் கிராம ஊழியர், ஊர்ப்புற நூலகர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய விகிதங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அரசுத்துறைகளை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். பொதுவினியோக முறையை வலுப்படுத்தி விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் ரெங்கசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முடிவில் வட்ட இணைச் செயலாளர் அஜய்ராஜே நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்