குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

விருதுநகர், சாத்தூர் நகராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.;

Update: 2021-10-23 19:29 GMT
விருதுநகர், 
விருதுநகர், சாத்தூர் நகராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
குடிநீர் பிரச்சினை 
 விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் நகரில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நகராட்சியின் சார்பில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் இருந்து கிடைக்கும் குடிநீரின்அளவு மிகக்குறைவாக உள்ளதாலும், குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் மின்தடை காரணமாக குடிநீர் வரத்தில் பாதிப்பு ஏற்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் நகரில் மக்களுக்கு குடிநீர் சீரான முறையில் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்த நகராட்சிகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 பணி நியமன ஆணை 
 இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தாமதமில்லாமல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து சாத்தூர் நகராட்சி குடிநீர் வினியோகம் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். முன்னதாக விருதுநகர் மற்றும் சாத்தூர் நகராட்சி அலுவலகங்களில் நடந்த ஆய்வின் போது கருணை அடிப்படையில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். 
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, ரகுராமன் எம்.எல்.ஏ., நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக என்ஜினீயர் கென்னடி, நகராட்சி ஆணையர்கள் விருதுநகர் சையது முஸ்தபா கமால்சாத்தூர், இளவரசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக அமைச்சர்கள் விருதுநகர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 3,000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் மருத்துவக்கல்லூரியில் ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டி, சீனிவாசன் எம்.எல்.ஏ., மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, ராம்கோ நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்