ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை
தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராஜபாளையம்,
தனது 3 மாத ஊதியத்தில் இருந்து 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஆதரவற்ற குழந்தைகள்
ராஜபாளையத்தில் இயங்கி வரும் பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள லைட் ஆப் லைப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளை ராஜபாளையத்தில் உள்ள ஜவுளி கடைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் அழைத்து சென்றார்.
பின்னர் தனது 3 மாத ஊதியத்தில் இருந்து ரூ.3,15,000 மதிப்பில் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களது எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. ஆகவே அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார்.
நலத்திட்ட உதவி
அவரின் வழியை பின்பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நானும் என்றும் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.