டேங்கர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

டேங்கர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான வழக்கில் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-10-23 18:34 GMT
குளித்தலை, 
டேங்கர் லாரி மோதியது
கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 30). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து தாத்தையங்கார்பேட்டை நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள மேலகுறப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த டேங்கர் லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது. 
டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை
இந்த விபத்தில் படுகாயமடைந்த கனகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தண்டபாணி வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரான கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (52) என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இலவச சட்ட உதவி மையம் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்