கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

Update: 2021-10-23 18:10 GMT
திருப்பூர்
பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விஜயராஜா, ரவி, கேசவராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அவினாசிபாளையம், செட்டிப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள் என 19 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்ட கடைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படாத 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 1 கடையில் செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட இறைச்சி 1½ கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கெட்டுப்போன சுகாதாரமற்ற நிலையில் இருந்த கோழி இறைச்சி 1 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. துரித உணவுக்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டு குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த வேகவைத்த உணவு 2½ கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
காளான், தின்பண்டங்கள் அழிப்பு
மேலும் 2 கடைகளில் கெட்டுப்போன நிலையில் இருந்த காளான் 5 கிலோ, பன், கேக் மற்றும் தின்பண்டங்கள் 4½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேக்கரிகளில் உணவுப்பொருட்களில் லேபிளில் முழு விவரம் அச்சிடப்படாததால் 1½ கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. 2 கடைகளுக்கு உரிமம், பதிவுச்சான்று பெறாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்படும் Fostac பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரித்தால் சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்