குமுளி மலைப்பாதையில் அரசு பஸ்-கார் மோதல்; 3 பேர் படுகாயம

குமுளி மலைப்பாதையில் அரசு பஸ்சும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-10-23 18:09 GMT
கூடலூர்:
கூடலூர் தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த ராஜா மகன் செல்வம் (வயது 22). கார் டிரைவர். இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை காரில் சவாரி ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி, செல்வம் நேற்று 9 பெண் தொழிலாளர்களை காரில் ஏற்றிக்கொண்டு இடுக்கி மாவட்டம் பத்துமுறியில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி காரில் அவர் வந்து கொண்டிருந்தார். 
குமுளி மலைப்பாதையில் மாதா கோவிலுக்கு அருகே அந்த கார் வந்தது. அப்போது எதிரே அரசு பஸ் ஒன்றும் வந்தது. அங்குள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது, காரும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரில் வந்த செல்வம், தோட்ட தொழிலாளர்களான கூடலூரை சேர்ந்த கலாவதி (38), முருகேஸ்வரி (52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். பஸ்சில் வந்தவர்களும் காயமின்றி தப்பினர். மேலும் காரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், பஸ்சின் முன்பகுதி கண்ணாடி உடைந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான ஆண்டிப்பட்டியை ேசர்ந்த கணேசனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்