முழுமையாக பழுது நீக்கி வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்

கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி வாகனங்கள் இயக்கப்படாததால் முழுமையாக பழுது நீக்கி வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆய்வில் கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2021-10-23 18:02 GMT
மயிலாடுதுறை:
கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி வாகனங்கள் இயக்கப்படாததால் முழுமையாக பழுது நீக்கி வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆய்வில் கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகன கூட்டாய்வு சிறப்பு முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 70 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 460 வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். அப்போது விபத்து நிகழ்ந்தால் மாணவர்களை வாகனத்தில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பது மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த 1½ ஆண்டு காலமாக பள்ளி வாகனங்கள் இயக்கப்படாததால் முழுமையாக பழுது நீக்கிய பிறகே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜனிடம் கலெக்டர் லலிதா அறிவுறுத்தினார். தொடர்ந்து தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற வாகன தீவிபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார். 
அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு பாதுகாவலராக...
பள்ளி வாகன ஓட்டுனர்கள் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து வரும்போதும், திரும்ப வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும் குழந்தைகளுக்கு முழு பாதுகாவலராக ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். வாகனங்களில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது பள்ளி வாகன பராமரிப்பு ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.
சாலை விதிமுறைகள்
கொரோனா காலத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து பள்ளி திறக்கப்பட உள்ளதால் பள்ளி வாகனங்கள் சரியான முறையில் இயங்குகிறதா? என்பதை டிரைவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக கல்லூரி கூட்டரங்கில் வாகன ஓட்டுனர்களுக்கு சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன், மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளந்திடசமுத்திரம், எடக்குடி வடபாதி, காரைமேடு, மங்கைமடம், பெருந்தோட்டம், சட்டநாதபுரம், கீழமூவர்க்கரை, தென்னாம்பட்டினம், கொண்டல், அகணி உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் 36 இடங்களில் நேற்று தமிழக அரசு சார்பில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காரைமேடு ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். 
இதே போல ஆக்கூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் லலிதா பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி ஆணையர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைகண்ணன், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்