போலீசாரிடம் இருந்து தப்பிக்க முல்லைப்பெரியாற்றில் குதித்த வாலிபர்

சின்னமனூர் அருகே கஞ்சா விற்க முயன்றபோது, போலீசார் விரட்டியதால் முல்லைப்பெரியாற்றில் குதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-23 17:26 GMT
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே கஞ்சா விற்க முயன்றபோது, போலீசார் விரட்டியதால் முல்லைப்பெரியாற்றில் குதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 
கஞ்சா விற்பனை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 26). இவர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக உள்ளார். மேலும் இவர், அவ்வப்போது கஞ்சாவும் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரிடம், கடலூர் மாவட்டம் கிழக்குபச்சான் குப்பத்தை சேர்ந்த  தீனா (22) என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கஞ்சா கேட்டார். இதையடுத்து சின்னமனூருக்கு நேரில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு பரமேஸ்வரன் கூறினார். அதன்படி, தீனா நேற்று சின்னமனூருக்கு வந்தார். 
செல்போனில் அழைப்பு
இதற்கிடையே சின்னமனூர் புதிய பைபாஸ் சாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது தீனா மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகப்பட்ட போலீசார் விசாரணை நடத்தினர். 
இதில், பரமேஸ்வரன் கஞ்சா தருவதாக கூறி வரவழைத்ததாக தீனா தெரிவித்தார். இதனையடுத்து தீனா மூலம் பரமேஸ்வரனை சிக்கவைக்க போலீசார் திட்டம் தீட்டினர். அதன்படி, தீனா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்தார். 
 ஆற்றில் குதித்த வாலிபர்
அப்போது, மோட்டார் சைக்கிளில் புதிய பைபாஸ் சாலைக்கு பரமேஸ்வரன் வந்தார். அங்கு போலீசார் நின்று கொண்டிருந்ததால், மோட்டார் சைக்கிளை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடினார். இதனைக்கண்ட போலீசார் சினிமா பாணியில் அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர்.சுமார் 3 கி.மீ. தூரம் ஓடிய பரமேஸ்வரன், நத்தத்துமேடு என்னுமிடத்தில் முல்லைப்பெரியாற்றங்கரையோரத்துக்கு வந்தார். ஒரு கட்டத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க வழியில்லை என்று கருதிய அவர் திடீரென முல்லைப்பெரியாற்றுக்குள் குதித்து விட்டார்.இதனை சற்றும் எதிர்பாராத சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், போலீஸ்காரர்கள் ராமகிருஷ்ணன், வேல்முருகன் ஆகியோரும் ஆற்றுக்குள் குதித்து அவரை மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.
2 பேர் கைது 
பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரன் மற்றும் கஞ்சா வாங்க வந்த தீனா ஆகியோரை கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரன் கொண்டு வந்த 2 கிலோ கஞ்சா, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்