திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமத்தின் பகுதி விரிவாக்கம்
2041-ம் ஆண்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமத்தின் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து தொழில்துறையினர், தன்னார்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
திருப்பூர்
2041-ம் ஆண்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமத்தின் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து தொழில்துறையினர், தன்னார்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
கருத்து கேட்பு கூட்டம்
திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு சார்பில் திருப்பூர் முழுமைத்திட்டம் கருத்து கேட்புக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் ஹித்தேஸ்குமார் எஸ்.மக்வானா தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்பு இயக்குனர் சரவனவேல்ராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் கூட்டு உள்ளூர் திட்ட குழுமத்தில் சில கிராமங்களை இணைத்து விரிவாக்கம் செய்ய திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமம் பகுதி அரசால் அறிவிக்கப்பட்டது. நகர் ஊரமைப்பு சட்ட அறிவிப்பின் கீழ் செயல்பட்டு அதைத்தொடர்ந்து முழுமைத்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அரசு செயலாளர்களின் உத்தரவுப்படி மக்களுடன் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் முழுமைத்திட்டத்தை மாறுதல் செய்து மீண்டும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்காக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகள்
திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமத்தில் ஏற்கனவே உள்ள பரப்பு 220 சதுர கிலோ மீட்டர் ஆகும். விரிவாக்கம் செய்யப்பட்ட பரப்பளவு 514 சதுர கிலோ மீட்டர் ஆகும். திருப்பூர் மாநகராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அவினாசி பேரூராட்சி, ஊத்துக்குளி பேரூராட்சி, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8 கிராமங்களான பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், முதலிபாளையம், மங்கலம், இடுவாய் ஆகியவை அடங்கும். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாச்சிப்பாளையம், பெருந்தொழுவு, தொங்குட்டிப்பாளையம் ஆகிய 3 கிராமங்களும், அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் தெக்கலூர், செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், கணியாம்பூண்டி, பழங்கரை உள்ளிட்ட 6 கிராமங்களும் அடங்கும்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் செங்கப்பள்ளி, முத்தம்பாளையம், அ.பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம் ஆகிய 4 கிராமங்கள், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் பூமலூர், வேலம்பாளையம், கரைப்புதூர், நாரணாபுரம் ஆகிய கிராமங்களும் அடங்கும்.
2041-ம் ஆண்டு வரை வளர்ச்சி
பொதுபயன்பாடு மற்றும் போக்குவரத்து பயன்பாடு நில உபயோக ஒதுக்கீட்டு கட்டுமான மற்றும் நில அபிவிருத்தி வளர்ச்சியின் போக்கு மற்றும் 2041-ம் ஆண்டு வரை வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ள பகுதிகளாக திட்டமிடப்பட்டுள்ளது. நீர் நிலைகளை பாதுகாத்தல், தொழிற்சாலை பகுதிகள், இணைப்பு சாலைகள், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், திடக்கழிவுகளான கட்டுமான கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுவதற்கான இடங்கள் ஆகியவை குறித்து கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது.
கருத்துக்களை அரசிடம் தெரிவித்து அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், நகர் ஊரமைப்பு இணை இயக்குனர் சேகரன், துணை இயக்குனர் தியாகராஜன், இணை இயக்குனர் (வேளாண்மை) மனோகரன், தன்னார்வலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.