செஞ்சியில் தாசில்தார் கையெழுத்தை போட்டு போலி சான்றிதழ் வழங்கிய அரசு ஊழியர் கைது

செஞ்சியில் அடகு கடை வைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு சான்றிதழ் வழங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-23 16:53 GMT
செஞ்சி, 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி துர்கா. இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அடகுகடை வைக்க செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் தாலுகா அலுவலகத்தில் செவலபுரை கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது 50) என்பவர் தாசில்தாரின் வாகனத்துக்கு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துர்கா உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தது தெரியவந்தது. 

இதுபற்றி அறிந்த முருகன்,  துர்காவிடம் சென்று, ஒரு குறிப்பிட்ட தொகையை தந்தால் அடகு கடை வைப்பதற்கான உரிமத்தை பெற்று தருவதாக கூறி உள்ளார். இதை நம்பி, அவரும் பணத்தை கொடுத்துள்ளார். 

போலி சான்றிதழ்

பணத்தை பெற்றுக்கொண்டு, முருகன் ஒரு சான்றிதழை துர்காவிடம் வழங்கினார். அதன் பின்னரும் மேற்கொண்டு பணம் வேண்டும் என்று அவர் கேட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து, வேறு வழியின்றி தாசில்தார் ராஜனிடம் நேரடியாக சென்று துர்கா முறையிட்டார். அப்போது, சந்தேகத்தின் பேரில் துர்காவிடம் இருந்த சான்றிதழை பெற்று தாசில்தார் ராஜன் பார்த்தார். 

அதில், அவரது கையெழுத்து போன்றே கையெழுத்திட்டு, அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். 

இதன் மூலம் முருகன், துர்காவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி சான்றிதழை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி  தாசில்தார் ராஜன் செஞ்சி போலீசில் புகார் செய்தார்.

கைது

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்