6 மாதங்களுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு மீண்டும் தொடக்கம் பக்தர்கள் மகிழ்ச்சி
பழனி முருகன் கோவிலில், 6 மாதங்களுக்கு பிறகு தங்கரத புறப்பாடு மீண்டும் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் பால்காவடி, மயில்காவடி எடுத்தும், முடிக்காணிக்கை, உண்டியல் காணிக்கை என நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
தங்கரத புறப்பாடு
இதேபோல் பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு ஆகியவற்றில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்கின்றனர்.
இந்த தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம், பூஜை பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் தங்களது குழந்தைகள், நோய்நொடி இன்றி வாழ தங்க தொட்டிலில் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உள்ளது. இதற்கு ரூ.300 செலுத்த வேண்டும்.
தரிசனத்துக்கு அனுமதி
இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதன்படி பழனி முருகன் கோவிலிலும் தரிசன தடை, தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு உள்ளிட்ட முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று குறைந்ததால் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) தரிசன தடை தொடர்ந்து நீடித்தது.
இதையடுத்து வார இறுதி நாட்களில் தரிசன அனுமதி, கோவில் வழிபாட்டு முறைகளில் கலந்துகொள்ள மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
தங்க தொட்டில்
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு, காலபூஜை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.
6 மாதங்களுக்கு பிறகு மேற்கண்ட வழிபாட்டு முறைகள் தொடங்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை முதலே பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் வருகை தந்தனர். இதில் 28 குழந்தைகளை தங்க தொட்டிலில் இட்டு அவர்களது பெற்றோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்வதற்கான முன்பதிவும் தொடங்கியது. இதில் 31 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
ஐப்பசி கிருத்திகை
நேற்று ஐப்பசி மாத கிருத்திகை என்பதால், பழனி முருகன் கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜையில் சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகால சந்தியில் வேடர் அலங்காரமும் நடந்தது.
அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் சுவாமிக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கட்டளை பூஜைக்கு பணம் செலுத்தியவர்களும் கலந்துகொண்டனர்.
தங்க மயில் வாகனம்
கிருத்திகை உற்சவத்தையொட்டி மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.