பழனியில் கொட்டித்தீர்த்த கனமழை சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் அவதி
பழனியில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. கழிவுநீருடன் கலந்து ஓடியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பழனி:
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பழனியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, பஸ்நிலைய பகுதி, அடிவாரம் ரோடு, காந்திசிலை பகுதி, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
பழனி பஸ்நிலைய பகுதியில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில கடைக்கு முன்பு மழைநீர் தேங்கி நின்றதால் காலையில் கடையை திறக்க வந்த வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். மழைநீர் வடிந்த பின்னரே வியாபாரம் செய்ய நேரிட்டது. அதேபோல் பஸ்நிலைய பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியதால் அந்த வழியாக சென்றவர்கள் மூக்கை பொத்திக் கொண்டே சாலையை கடந்தனர்.
கொசு உற்பத்தி
இந்நிலையில் பழனியில் சாலை, சாக்கடை கால்வாய் பணிகள் முறையாக நடைபெறாததால் சிறு மழைக்கே சாலைகளில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. எனவே சாலை பணிகளை முறையாக மேற்கொள்ளாத நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மழைகாலம் தொடங்க உள்ளதால் காய்ச்சல், சளி பாதிப்பு அதிகமாக வரும். எனவே பழனி நகர், அடிவாரம் ஆகிய இடங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க தேங்கி கிடக்கும் இளநீர் கூடுகள், குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
=