‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.;

Update: 2021-10-23 14:51 GMT
திண்டுக்கல்:
தெருவிளக்கு வசதி அவசியம் 
பெரியகுளம் அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தில் கக்கன்ஜி காலனியில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. மேலும் அவ்வப்போது திருடர்கள் நடமாட்டமும் உள்ளது. இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். -ஜோதிலட்சுமி, புதுக்கோட்டை.
குப்பை குவியல் 
கோபால்பட்டியில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் வழியில் குப்பை தொட்டி நிரம்பி வழிந்த பின்னரும் குப்பைகள் அள்ளப்படுவது இல்லை. இதனால் குப்பை தொட்டிகளை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, குப்பைகளை தினமும் அகற்றி சுகாதாரக்கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும். -சையது, கோபால்பட்டி.
சேதமான சாலை சீரமைக்கப்படுமா?
பழனி தாலுகா ரூக்குவார்பட்டியில் இருந்து எரமநாயக்கன்பட்டி வரை புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து சேதம் அடைந்த இடத்தை சரிசெய்வதற்கு பணிகள் தொடங்கி, பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் தார்சாலையில் நடுவே மண் பாதை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலமாக இருப்பதால் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. சாலை சீரமைப்பு பணியை மீண்டும் தொடங்குவார்களா? -பிரேம்குமார், எரமநாயக்கன்பட்டி.
நடுத்தெருவில் மின்கம்பம் 
போடி தாலுகா காசிமலை புதுக்காலனியில் நடுத்தெருவில் மின்கம்பம் அமைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் தெருவில் செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கூட மின்கம்பத்தில் மோதி கொள்கின்றனர். இதை தடுக்க மின்கம்பத்தை தெருவின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.-நாகேந்திரன், போடி.
சாக்கடை கால்வாய் வசதி
திண்டுக்கல் நாகல்நகர் ராயல்சிட்டி பகுதியில் ஒரு தெருவில் மட்டும் சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாரல் மழை பெய்தால் கூட தெரு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் மழைநீர் மட்டுமின்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதை தவிர்க்க அடிப்படை வசதிகளை செய்து தருவார்களா?-அர்ஜூன், நாகல்நகர்.
தெருவில் தேங்கிய மழைநீர்
திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் செபஸ்தியார் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி உள்ளது. ஆனால் மழைநீர் கால்வாயில் செல்லாமல் தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் முறையாக வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -பீட்டர்சன், என்.பஞ்சம்பட்டி.

மேலும் செய்திகள்