உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அமைச்சர்கள்- கனிமொழி எம்.பி. மரியாதை

எட்டயபுரத்தில் பிறந்த நாளையொட்டி உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2021-10-23 14:35 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் பிறந்த நாளையொட்டி உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

உமறுப்புலவர் பிறந்த நாள்

சீறாப்புராணம் தந்த அமுதகவி உமறுப்புலவர் 379-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது.  
உமறுப்புலவர் மணிமண்டபத்தில் தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் உள்பட பலர் மரியாதை செலுத்தினர். 

பேட்டி

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மிகச்சிறந்த இலக்கியமான சீறாப்புராணம் தந்த உமறுப்புலவர் நினைவினை போற்றும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மணிமண்டபம் உருவாக்கப்பட்டது. 
தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் தொடர்ந்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் மற்றும் அவர்களின் பெருமையை சொல்லும் அளவிற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணன், எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பன், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் பாரதி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்