நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

கூடலூர் அருகே அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2021-10-23 13:14 GMT
கூடலூர்

கூடலூர் அருகே அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

பழுதான பஸ்கள்

கூடலூர் தாலுகா பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் பழுதடைந்த மேற்கூரை வழியாக தண்ணீர் பஸ்களுக்குள் வழிந்தோடுகிறது. மேலும் திடீரென நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது.

அதாவது கடந்த வாரம் மசினகுடி அரசு பஸ் பழுதாகி நின்றது. நேற்று முன்தினம் தேவர்சோலையில் இருந்து கூடலூர் வந்த அரசு பஸ் 1-ம் மைல் பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் நடுவழியில் இறங்கி வேறு வாகனங்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது.

நடுவழியில் தவிப்பு

இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையில் இருந்து கூடலூருக்கு பயணிகளுடன் அரசு பஸ் நேற்று காலை 7 மணிக்கு வந்து கொண்டு இருந்தது.

சுண்ணாம்பு பாலம் பகுதியில் வந்தபோது திடீரென பஸ்சின் முன் பக்க டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் உரிய நேரத்தில் கூடலூருக்கு வர முடியாமல் நடுவழியில அவதி அடைந்தனர். அப்பகுதியில் வேறு வாகனங்கள் வராததால் 3 கி.மீட்டர் தூரம் நடந்து சூண்டிக்கு வந்தனர். பின்னர் தனியார் ஜீப்புகளில் ஏறி மிகவும் காலதாமதமாக கூடலூர் வந்து சேர்ந்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
ஓவேலி பேரூராட்சி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் கூடலூர் வருகின்றனர். ஆனால் கூடலூரில் இருந்து ஓவேலிக்கு இயக்கப்படும் பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், உதிரி பாகங்கள் கூடலூர் பணிமனைக்கு வருவதில்லை. 

இதனால் பஸ்களை பராமரிக்க முடியாமல் இயக்கப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர். எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்