97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து
ஊட்டி நகராட்சியில் சீல் வைத்தும் நிலுவை வாடகை செலுத்தாத 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டி நகராட்சியில் சீல் வைத்தும் நிலுவை வாடகை செலுத்தாத 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நிலுவை வாடகை
ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புற பகுதியில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு வாடகை உயர்த்தி மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வாடகையை வியாபாரிகள் செலுத்தாமல் இருந்து வந்தனர். பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையிலும் பலன் இல்லை. இதனால் நகராட்சிக்கு ரூ.35 கோடி பாக்கி இருந்தது. இதன் காரணமாக கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வாடகை செலுத்தாத 757 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நிலுவை தொகையை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை ரூ.15 கோடிக்கும் மேல் நிலுவை தொகை வசூலாகி இருக்கிறது.
கால அவகாசம்
ஆனால் சீல் வைத்தும் 183 கடைகளை வைத்து இருப்பவர்கள் வாடகை செலுத்தவில்லை. ஏற்கனவே ஒரு மாதம் கால அவகாசம் அளித்தும் செலுத்தாததால், அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. உரிய நாட்களில் வாடகை செலுத்தாவிட்டால் அந்த கடைகளை மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குத்தகை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிலர் நிலுவை வாடகையை செலுத்தி வந்தனர்.
உரிமம் ரத்து
எனினும் காலக்கெடு முடிந்தும் வாடகை செலுத்தாத கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறும்போது, ஊட்டி நகராட்சியில் சீல் வைக்கப்பட்ட கடைகளில் வாடகை செலுத்தாத 183 கடைகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, வாடகை செலுத்த இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுவரை வாடகை செலுத்தாமல் உள்ள 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த கடைகளை நகராட்சி கையகப்படுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.