ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பூ வியாபாரி பிணமாக மீட்பு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பூ வியாபாரி பிணமாக மீட்கப்பட்டார்.;

Update: 2021-10-23 12:15 GMT
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மருதாண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் சூளகிரியில் ஒரு வங்கி எதிரில் பூக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பூமாலை கட்டும் இலைகளை பறிப்பதற்காக சூளகிரி அருகேயுள்ள கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றின் வழியாக சென்றார். அப்போது திடீரென அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். மேலும் தகவல் அறிந்து சூளகிரி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஓசூரில் இருந்து தீயணைப்பு படைவீரர்களும் அங்கு சென்று பெருமாளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், பெருமாளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பெருமாளை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தடுப்பணை அருகே பெருமாள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடலை சூளகிரி போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்