கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்-கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-23 11:19 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி முகாம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 6-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாடுவனப்பள்ளி ஊராட்சி ராமச்சந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
819 இடங்களில் முகாம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5 கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இன்று 6-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது. அதன்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, ஓசூர் மருத்துவமனை மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் என மொத்தம் 819 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
இதுவரை நடந்த 5 முகாம்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கோவிஷீல்டு 2 லட்சத்து 14 ஆயிரத்து 480 தடுப்பூசிகளும், கோவேக்சின் 9 ஆயிரத்து 90 தடுப்பூசிகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
தவறாமல் தடுப்பூசி போடுங்கள் 
முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அதேபோல முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி பின்பு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் கொரோனா நோய் அறிகுறி ஏற்பட்டாலும் அவசர சிகிச்சை தேவைப்படாமலும், ஆக்சிஜன் தேவை ஏற்படாமலும் இருக்கும். எனவே பொதுமக்கள் தவறாமல் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி குணசேகரன், துணைத்தலைவர் நந்தினி வெங்கடாசலம், ஊராட்சி செயலாளர் குமரேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்