6-வது கட்டமாக, 601 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 6-வது கட்டமாக 601 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஊசி போட்டுக்கொண்டனர்.

Update: 2021-10-23 10:29 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 6-வது கட்டமாக 601 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஊசி போட்டுக்கொண்டனர்.
தடுப்பூசி முகாம்
தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த 5 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. பொதுமக்களின் வசதிக்காக தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 
அதன்படி நேற்று 6-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் 601 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்ற இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிறப்பு கவனம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 
அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அனைவரும் இந்த முகாமை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட நரசய்யர் குளம், தெற்கு ரெயில்வே லைன் ரோடு, தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர், பாலக்கோடு ஒன்றியம் பேனாரஅள்ளி, பொம்மஅள்ளி, எர்ரசீகலஅள்ளி, மொரப்பூர் ஒன்றியம் திப்பம்பட்டி பஸ் நிறுத்தம், வகுரப்பம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், நகராட்சி ஆணையாளர் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலர் சரஷ்குமார், தாசில்தார்கள் ராஜராஜன், ராஜா, அசோக் குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்