பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி போலீஸ்காரருக்கு வளைகாப்பு விழா நடத்திய போலீசார்
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி போலீஸ்காரருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வருபவர் அனுஜா. இவருக்கு திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இந்த நிலையில் இவர் பிரசவத்துக்காக அவரது சொந்த ஊர் செல்ல தயாரானார்.
இதற்கிடையே, தங்களுடன் பணிபுரிந்த பெண் போலீஸ் அனுஜாவுக்கு வளைகாப்பு நடத்தி அனுப்பி வைக்க பூந்தமல்லி போலீசார் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பூந்தமல்லி போலீஸ் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் அனுஜாவுக்கு சந்தனம், வளையல், பூ, மாலை அணிவித்தும் சீர்வரிசை பொருட்கள் வழங்கியும் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சக பெண் போலீசார் சீமந்த பாடலை பாடி கர்ப்பிணி அனுஜாவை வாழ்த்தினர். வளைகாப்பு விழாவில் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மற்றும் சக போலீசார் கலந்துகொண்டனர்.