நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன் தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன் தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9-ந்தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற்றது. கடந்த 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் 9 யூனியன்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
அந்தந்த யூனியன் அலுவலக கூட்டரங்குகளில் காலை 10 மணிக்கு தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பெரும்பாலான யூனியன்களில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி அம்பை யூனியன் தலைவராக சிவனு பாண்டியன், துணைத்தலைவராக ஞானகனி, சேரன்மாதேவி யூனியன் தலைவராக பூங்கோதை சீவலமுத்து, துணைத்தலைவராக ஆனந்தலட்சுமி, களக்காடு யூனியன் தலைவராக ஜா.இந்திரா, துணைத்தலைவராக விசுவாசம், மானூர் யூனியன் தலைவராக ஸ்ரீலேகா, துணைத்தலைவராக நயினார் முகமது சாபத்துல்லா,
பாளையங்கோட்டை யூனியன் தலைவராக கே.எஸ்.தங்கபாண்டியன், துணைத்தலைவராக முரளிதரன், பாப்பாக்குடி யூனியன் தலைவராக பூங்கோதை, துணைத் தலை வராக மாரிவண்ணமுத்து, ராதாபுரம் யூனியன் தலைவராக ஜெ.சவுமியா, துணைத்தலைவராக இளையபெருமாள், வள்ளியூர் யூனியன் தலைவராக ஞா.சேவியர் செல்வராஜா, துணைத்தலைவராக வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நாங்குநேரி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சவுமியா ஆரோக்கிய எட்வினும், அ.தி.மு.க. சார்பில் செல்வி லக்கனும் மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் சவுமியா ஆரோக்கிய எட்வின் 11 வாக்குகள் பெற்று யூனியன் தலைவராக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ெசல்வி லக்கனுக்கு 5 வாக்குகள் கிடைத்தது. நாங்குநேரி யூனியன் தலைவர் பதவியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றியது.
பின்னர் நடந்த யூனியன் துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இசக்கிபாண்டி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் செந்தூர் பாண்டியனுக்கு 6 வாக்குகள் கிடைத்தது. பின்னர் யூனியன் தலைவராக சவுமியா ஆரோக்கிய எட்வினும், துணை தலைவராக இசக்கிபாண்டியும் பதவியேற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களிலும் தலைவர் பதவிகளை தி.மு.க.வினரே கைப்பற்றினர். ராதாபுரம் யூனியனில் துணை தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. மற்ற 8 யூனியன்களிலும் துணை தலைவர் பதவிகளை தி.மு.க.வினரே கைப்பற்றினர்.
நெல்லை மாவட்டத்தில் 204 பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்தந்த பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். சில பஞ்சாயத்துகளில் போட்டியின்றி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். சில இடங்களில் 2 வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையிலும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக பதவியேற்றவர்களுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.