மானூர் யூனியன் தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு
மானூர் யூனியன் தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு செய்யப்பட்டார்.
மானூர்:
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த 16 பேரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும், அ.ம.மு.க., பா.ஜ.க.வைச் சேர்ந்த தலா ஒருவரும், சுயேச்சைகள் 4 பேரும் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர்.
இதில் 19-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த 22 வயதான பெண் என்ஜினீயர் ஸ்ரீலேகா வெற்றி பெற்றார். இவருடைய தந்தை அன்பழகன், மானூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் மானூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான முறைமுக தேர்தல் நடந்தது. ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) பாபு, தேர்தல் அலுவலராக செயல்பட்டார்.
இளம் வயதிேலயே ஒன்றிய கவுன்சிலராக வென்ற ஸ்ரீலேகா, மானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஸ்ரீலேகா போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோன்று 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நயினார் முகம்மது சாபாதுல்லா துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வானார். தொடர்ந்து 2 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா கூறியதாவது:-
மானூர் யூனியன் 19-வது வார்டில் என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், யூனியன் தலைவராக போட்டியின்றி வெற்றி பெற வைத்த ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இளம் வயதிலேயே யூனியன் தலைவராக பெற்ற வெற்றியை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் என்றும் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த பாடுபடுவேன். அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஏழை எளிய மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளம் வயதிலேயே தலைவராக பதவியேற்ற ஸ்ரீலேகாவை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.