புளியரையில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல் சாலைமறியலால் பரபரப்பு

புளியரையில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-10-22 21:53 GMT
தென்காசி:

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தென்காசி மாவட்டம் புளியரை பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அழகிய திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றார். அங்குள்ள 12 வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேரும், தி.மு.க.ைவச் சேர்ந்த 4 பேரும் வென்றனர்.
தொடர்ந்து பஞ்சாயத்து துணை தலைவரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல், புளியரை பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சரவணனும், தி.மு.க. சார்பில் குருமூர்த்தியும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

சேலையை பிடித்து இழுத்தனர்

வார்டு உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக, புளியரை பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் சென்று ெகாண்டிருந்தனர். அப்போது அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்களை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது.
அப்போது பெண் வார்டு உறுப்பினரின் சேலையை பிடித்து சிலர் இழுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பினர். இதையடுத்து பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

சாலை மறியல்

இதை கண்டித்து புளியரை மெயின் ரோட்டில் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்ேபாது கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கூறுைகயில், ‘ஜனநாயக முறைப்படி பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்களுடன் நானும் (கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ.) சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கூறினார்.

போக்குவரத்து பாதிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் ஆணையத்தால் ஒத்தி வைக்கப்பட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் மற்றொரு நாளில் நடத்தப்படும். 
அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் தமிழக- கேரள எல்லை பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் செய்திகள்