அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது-
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். வரட்டுப்பள்ளம்
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 2 மலைகளுக்கு இடையே வரட்டுப்பள்ளம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடியாகும். பர்கூர் மலைப்பகுதிகளில் மழை பொழியும்போதெல்லாம் அந்த தண்ணீர் காட்டாறு, ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து சேரும். வரட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வரட்டுப்பள்ளம் அணை தண்ணீரே ஆதாரமாக உள்ளது. மேலும் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து மான், யானை உள்ளிட்ட விலங்குகளும் வந்து தண்ணீர் குடித்துச்செல்கின்றன.
நிரம்பியது
இந்தநிலையில் வரட்டுப்பள்ளம் பகுதியில் கடந்த ஒருமாதமாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, நேற்று வரட்டுப்பள்ளம் அணை தன் முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் அணையில் இருந்து உபரிநீர் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரி மற்றும் அந்தியூர் பெரிய ஏரிக்கு செல்கிறது.
அணை நிரம்பியதை அறிந்த அந்த பகுதி விவசாயிகள், அணைக்கு வந்து தண்ணீரில் பூக்களை தூவி வணங்கினார்கள். தொடர்ந்து மழை பெய்தால் உபரிநீர் அதிக அளவில் வெளியேறி கெட்டி சமுத்திரம் எரியும், பெரிய ஏரியும் நிரம்பும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
இதற்கிடையே முழு கொள்ளளவை எட்டிய வரட்டுப்பள்ளம் அணையை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். உபரிநீர் செல்லும் வழியில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.