குண்டும் குழியுமான ரோடு
ஈரோடு பெரியவலசு 4 ரோடு பகுதியில் பல்வேறு பணிகளுக்காக ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டன. இதனால் இந்த ரோடு மோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மேலும் மழைக்காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழி இருப்பதே தெரிவதில்லை. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பெரியவலசு 4 ரோடு பகுதியில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரேசன், ஈரோடு.
பாதாள சாக்கடை மூடப்படுமா?
சூரியம்பாளையம் கிராமம் பெருமாள்மலையில் கருப்பராயன் தெரு உள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடை மூடி மூடப்படாமல் திறந்தே கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ஏராளமான விபத்துகள் நடக்கிறது. உடனே பாதாள சாக்கடை மூடியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சூரியம்பாளையம்.
வடிகால் வசதி வேண்டும்
தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் உள்ள 7-வது வார்டுக்கு உள்பட்ட பகுதி அம்பேத்கர் தெரு. இங்கு கடந்த பல ஆண்டுகளாக கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருகிறது. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் வடிகால் வசதி செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தாளவாடி.
சாக்கடை சுத்தம் செய்யப்படுமா?
நாராயணவலசு திருமால் நகர் ரேஷன் கடை அருகே உள்ள சாக்கடையில் உள்ள கழிவுகள் கடந்த பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, ஈரோடு.
குடிநீர் குழாயில் உடைப்பு
ஈரோடு நாடார் மேடு திலகர் வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாகவும் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடைப்பு ஏற்பட்டு உள்ள குடிநீர் குழாயையும் சரிசெய்து கொடுக்க வேண்டும்.
எஸ்.வீ.ரவிச்சந்திரன், நாடார் மேடு.
சுத்தம் செய்யப்படாத சாக்கடை
பவானி ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எதிரே உள்ள சந்தில் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. பலமுறை புகார் செய்தும் பலனில்லை. இனிமேலாவது அதிகாரிகள் சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீனிவாசபுரம்.
தார்சாலை அமைக்கப்படுமா?
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ரோட்டில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி, மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்து ரோடுகள் சரிவர நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக தற்போது வண்டியூரான் கோவில் வீதியில் இருந்து ஆர்.கே.வி. ரோடு வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை நேரத்தில் தண்ணீர் தேங்குவதால் நடந்து மற்றும் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே கருங்கல்பாளையம் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கருங்கல்பாளையம்.
-------------