பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் சி.எம்.பி. லயன் மற்றும் பட்டுக்கோட்டை சாலை சந்திப்பில் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் அதிக விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு அருகே அம்மன்பேட்டை ராஜேந்திரம் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அருகில் உள்ள பள்ளிகூடத்தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டில் செல்ல பிராணியாக நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நாய்கள் வீட்டில் கட்டுப்பாட்டில் இல்லாமல் தெருவில் பள்ளி அருகே சுற்றி திரிகின்றன. பள்ளி மாணவர்கள் நடந்து வரும் போது அன்றாடம் நாய் அவர்களை துரத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் மழலையர் பள்ளி வருகிற 1-ந்தேதி உள்ளது. எனவே மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மேலவெளி அப்துல் வஹாப் நகரில் கடந்த ஓராண்டாக 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் அட்டகாசம் செய்கிறது. இது சம்பந்தமாக தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் மேலவெளி பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடம் மனு அளித்தோம். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பார்த்து சென்றார்கள். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. இதனால் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குரங்குளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்துக்கு இரவு நேரங்களில் அதாவது இரவு 11:30 மணியிலிருந்து அதிகாலை 4:45 மணி வரை எந்தவித பஸ் வசதியும் இல்லை. இதைப்போல அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அதிகாலை 4 மணியிலிருந்து காலை 6 மணி வரையும் எந்த விதமான பஸ் வசதியும் இல்லை. இதனால் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள். எனவே பண்டிகை காலம் நெருங்குவதை அதிகாரிகள் கருத்தில் கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.