அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை
தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை தரக்கூடிய புதிய வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் பணிமனை மற்றும் 50 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி கட்டுமான பணி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டார்.
வேலைவாய்ப்பு
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை வருகிற கல்வி ஆண்டில் 50 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல்-அமைச்சரின் உத்தரவு படி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 30 தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பினை உருவாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய தொழிற்பயிற்சி பிரிவு
கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிய கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு அரசின் சார்பில் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள பிளம்பர், ஏசி மெக்கானிக், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதுபோன்ற உடனடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு புதிய தொழிற்பயிற்சி பிரிவுகளை உருவாக்கி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது கலெக்டர் கவிதாராமு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீரராகவ ராவ், புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.