சிவகாசி
சிவகாசியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களின் விலை கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, தர்மபுரி, காவேரிப்பட்டணம் மற்றும் குடியாத்தம் ஆகிய பகுதியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அனைவரும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை எப்படி சமாளிப்பது என்றும், மேற்கொண்டு தொழிலை எப்படி நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டது. அதில் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக தீப்பெட்டி ஆலைகளை மூடுவதை தவிர்க்கவும், தொழிலாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்கிடவும் தற்போது ரூ.1-க்கு விற்பனை செய்யப்படும் தீப்பெட்டியின் விலையை ரூ.2 ஆக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து சில நாட்களில் தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.