408 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள்

தேனி மாவட்டத்தில் 408 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்று நடக்கிறது.

Update: 2021-10-22 17:30 GMT
தேனி: 

தமிழகத்தில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு வசதியாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது. இதுவரை 5 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் 6-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 408 இடங்களில் இந்த முகாம்கள் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி வளாகங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் கூடும் முக்கிய கடைவீதிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. தேனியில் இன்று வாரச்சந்தை நடக்கும் என்பதால் வாரச்சந்தை வளாகத்திலும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 83 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 6 லட்சத்து 20 ஆயிரத்து 293 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 63 ஆயிரத்து 107 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 12 ஆயிரத்து 537 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரத்து 160 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்