வருகிற 9-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வருகிற 9-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2021-10-22 17:09 GMT
மயிலாடுதுறை:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வருகிற 9-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
விவசாயிகள் சங்க கூட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார். தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். 
இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இழப்பீடு பெற முடியாது
கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீட்டு தொகை பெற்று தரப்படும் என்று அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
கடந்த சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டு தொகை தற்போது தனியார் காப்பீடு நிறுவனத்தால் மத்திய, மாநில அரசுகளின் பங்கு தொகையையும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த நிறுவனம் காப்பீட்டு தொகை வழங்கியதில் கிராமத்திற்கு கிராமம் வேறுபாடு உள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் உள்ள 1,072 வருவாய் கிராமங்களில் 195 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு வெறும் பூஜ்ஜியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 195 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒரு ரூபாய்கூட பயிர் இழப்பீடு பெற முடியாது. 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எதிர்க்கட்சி் தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனமும், வேளாண்துறை அதிகாரிகளும் இணைந்து பெரும் மோசடியை செய்துள்ளனர். 
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை பங்கிட்டு தரவில்லை. இதனால் விவசாயிகளுக்கும், அரசுக்கும் பிரிவினையை வேளாண்துறை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியில் பணியாற்றும் வேளாண்துறை அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முழுமையாக காப்பீட்டு தொகை கிடைக்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
9-ந் தேதி போராட்டம்
தமிழகம் முழுவதும் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில தலைவர் பழனியப்பன், மாவட்ட தலைவர்கள் சரவணன், கமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்