கந்திகுப்பம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
கந்திகுப்பம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.;
பர்கூர்:
ஊறுகாய் வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). ஊறுகாய் வியாபாரம் செய்து வந்தார். அவரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பசவண்ணகோயில் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரராவ் (57) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று ஊறுகாய் வாங்குவதற்காக ஆந்திரா மாநிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டினார். மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமட்டாரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து கந்திகுப்பம் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.