சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் கெஜகோம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு

சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் கெஜகோம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு

Update: 2021-10-22 16:30 GMT
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி கெஜகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அது பல ஆடுகளை அடித்து கொன்று விட்டதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். 
இந்தநிலையில் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோரது தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் அருள்குமார் மற்றும் வன காப்பாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணசாமி, அகிலா, ஷர்மிளா அடங்கிய குழுவினர் கெஜகோம்பை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட இடத்திற்கு ேநற்று சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தை அடித்து கொன்ற ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் இரவு நேரத்தில் யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தையின் கால்தடம் என்று கூறப்பட்டதை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அதன் முடிவு வந்து சிறுத்தையின் கால்தடம் தான் என உறுதி செய்யப்பட்டவுடன் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்