மாவட்ட ஊராட்சி துணை தலைவராக அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு
மாவட்ட ஊராட்சி துணை தலைவராக அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு
கோவை
துணை தலைவர் தேர்தல்
கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்பட 16 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மாவட்ட ஊராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ள னர். இதில் 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 6 தி.மு.க. கவுன்சிலர்கள், 2 பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளனர். இதனால் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. இடையே போட்டி நிலவியது. எனவே கோவை கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நேற்று மதியம் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், தேர்தல் அலுவலருமான கவிதா முன்னிலையில் நடைபெற்றது. அங்கு மாவட்ட கவுன்சிலர்கள் வந்தனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தல் அலுவலர் கவிதாவிடம், துணைத்தலைவர் தேர்தலில் முன்னாள் அமைச்சரின் தலையீடு உள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர் அறையில் இருக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்களை வெளியேற்ற வேண்டும். அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்காளித்தால் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கவுன்சிலர்கள் மிரட்டப்படுகின்றனர். தேர்தல் நேர்மையான முறையில் நடக்காது என்பதால் வெளிநடப்பு செய்வதாக கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ராதாமணி வெற்றி
இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் கலெக்டர் சமீரனை சந்தித்து மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். இதனிடையே துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் ராதாமணி வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ராதாமணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழை ராதாமணியிடம், தேர்தல் அதிகாரி கவிதா வழங்கினார்.
வாழ்த்து
இதைத்தொடர்ந்து துணை தலைவர் ராதாமணி கோவை அ.தி.மு.க. கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகைக்கு வந்தார். பின்னர் அவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல் கந்தசாமி, செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், அனைத்துலக எம்.ஜி..ஆர். மன்ற துணைச் செயலாளர் அசோகன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர்கள் கே.தாமோதரன். சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, மாவட்ட ஊராட்சி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராதாமணி சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
-