கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
கடமலை-மயிலை ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தேனி :
துணைத்தலைவர் தேர்தல்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியக்குழு தலைவராக சந்திராசந்தோசம் இருந்து வருகிறார். தற்போது வரை துணை தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்த ஒன்றியத்தில் துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று மதியம் அனைத்து கவுன்சிலர்களும் மயிலாடும்பாறையில் உள்ள ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒத்தி வைப்பு
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் எந்தவித காரணமும் குறிப்பிடாமல் ஒன்றியக்குழு துணை தலைவருக்கான தேர்தலை ஒத்தி வைப்பதாக ஒன்றிய அதிகாரிகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கோம்பைத்தொழு அ.தி.மு.க. கவுன்சிலர் முருகன் ஆகியோர் ஒன்றிய ஆணையர் சரவணனிடம் கேட்டனர். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டு கொள்ளும்படி ஆணையர் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒன்றியக்குழு தலைவருடன் வந்திருந்த சிலர் ஆணையரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் சமரசம் செய்தனர். இந்த நிலையில் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்து அலுவலகத்தில் பணியில் இருந்த ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டரிடம் புகார்
அப்போது கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஒன்றிய அலுவலக தொடர்பு இல்லாதவர்கள் ஆணையரை ஒருமையில் பேசியதாகவும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கவுன்சிலர்களை தவிர்த்து மற்ற அனைவரையும் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர். பின்பு இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிப்பதாக முடிவு செய்து பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர்.