செட்டிநாயக்கன்பட்டியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தள்ளுமுள்ளு வார்டு உறுப்பினர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

செட்டிநாயக்கன்பட்டியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-22 14:08 GMT
தாடிக்கொம்பு:
திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 9-வது வார்டு உறுப்பினர் அன்னகாமாட்சி, 15-வது வார்டு உறுப்பினர் சுருளிவேல் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். இதையடுத்து அந்த 2 வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு 9-வது வார்டில் ஐஸ்வர்யாவும், 15-வது வார்டில் கணேசனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஊராட்சி அலுவலகத்தில் 22-ந்தேதி (அதாவது நேற்று) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தேர்தல் அலுவலர் மலரவன் தலைமையில் நேற்று துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. ஆதரவு பெற்ற உறுப்பினர் கணேசன் திடீரென தேர்தல் நடக்கும் இடத்துக்கு வந்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியதுடன், தேர்தல் நடத்தும் அலுவலரின் மேஜையில் இருந்த படிவத்தை எடுத்து கிழித்து எரிந்தார். இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து கணேசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 5 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மயங்கி விழுந்தார்
பின்னர் கணேசன் உள்பட 6 பேரும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை என்று கூறி தேர்தல் அறையைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து ஊராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. ஆதரவாளர்கள் திரண்டனர். பின்னர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தி.மு.க. ஆதரவாளர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளாக மாறியது. ஒருகட்டத்தில் 15-வது வார்டு உறுப்பினர் கணேசன் மயங்கி கீழே விழுந்தார். அவரை தி.மு.க. ஆதரவாளர்கள் தாங்கிப்பிடித்தனர். பின்னர் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். தள்ளு முள்ளு காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
துணை தலைவர் தேர்வு
அப்போது, வார்டு உறுப்பினரிடம் தன்னை பேசவே அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதித்து இருந்தால் தானே என்னால் அவர்களிடம் பேசி வாக்கு சேகரிக்க முடியும். என்னை பேச விடாமல் வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறியே நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று சூப்பிரண்டுவிடம் கணேசன் தெரிவித்தார்.
அதையடுத்து சுமுக பேச்சுவார்த்தை மூலம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தினார். அதையடுத்து மீண்டும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 6-வது வார்டு உறுப்பினரும் அ.தி.மு.க. ஆதரவு பெற்றவருமான அர்ஜூனன் ஊராட்சி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் மலரவன் வழங்கினார்.

மேலும் செய்திகள்