காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
பாளையங்கோட்டையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
நெல்லை:
கடந்த 21-10-1959 அன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று நெல்லை மாநகர பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள போலீசாரின் நினைவுத்தூணுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், குற்றப்பிரிவு துணை கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் சமய்சிங் மீனா (வள்ளியூர்), ராஜாத் சு.சதுர்வேதி (நாங்குநேரி) மற்றும் போலீஸ் அதிகாரிகளும் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியின்போது அணிவகுத்து நின்ற போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 54 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.