தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி

அம்பை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2021-10-22 00:18 GMT
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே கவுதமபுரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தனகுமார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வதி.இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 1½ வயதில் ஸ்ரீதர்சன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். பார்வதி குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.

நேற்று மாலையில் பார்வதி வீட்டில் அமர்ந்து பீடி சுற்றி கொண்டிருந்தார். 2 குழந்தைகளும் வீட்டின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை ஸ்ரீதர்சன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த நிலையில் பார்வதி தனது குழந்தை ஸ்ரீதர்சனை தேடியபோது, அவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்