புனே அருகே வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1¾ கோடி நகை, பணம் கொள்ளை

புனே அருகே பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-10-21 22:18 GMT
கோப்பு படம்
புனே, 
புனே அருகே பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 
வங்கிக்குள் புகுந்தனர்
புனே மாவட்டம் சிரூர் தாலுகாவில் உள்ள பிம்பர்காட் கிராமத்தில் ‘பேங்க் ஆப் மகாராஷ்டிரா’ என்ற மராட்டிய வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் 1.30 மணி அளவில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்த சமயம் பார்த்து முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 4 பேர் வங்கிக்குள் திபுதிபுவென நுழைந்தனர். 
அவர்கள் வங்கி மேலாளர் மற்றும் காசாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து வங்கியில் உள்ள பணம் மற்றும் நகைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டினர். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் கொள்ளையர்கள் அனைவரும் கையில் துப்பாக்கி வைத்திருந்ததால் உயிர் பயத்தில் அவர்கள் கூறியபடி பணத்தையும், நகைகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். 
 5 நிமிடத்தில் கொள்ளை
கிடைத்த பணத்தையும், நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு கொள்ளையர்கள் வெளியே தயாராக இருந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த முழு சம்பவமும் 4 முதல் 5 நிமிடத்திற்குள் அரங்கேறியுள்ளது. வங்கியில் கொள்ளையர்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.33 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
 தனிப்படை அமைப்பு
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிம்பர்காட் ஒரு தொலைதூர கிராமம் ஆகும். மேலும் இது ஒரு சிறிய கிளை என்பதால் பாதுகாவலர் இல்லை. எனவே இந்த வங்கியில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருக்கலாம். 
முன்பே நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். வங்கியில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி உள்ளது. ஆனாலும் மேலாளர் மற்றும் காசாளர் பயத்தில் அதை அழுத்தவில்லை. 
வங்கி கிளையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை நாங்கள் கைப்பற்றி உள்ளோம். மேலும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க பல தனிப்படைகளை அமைத்துள்ளோம்” என்றார். 
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்