நடிகர் அமீர்கானின் கருத்துக்கு பா.ஜனதா எம்.பி. கடும் எதிர்ப்பு

டயர் நிறுவன விளம்பத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் அமீர்கானின் கருத்துக்கு பா.ஜனதா எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-21 21:16 GMT
பெங்களூரு: டயர் நிறுவன விளம்பத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் அமீர்கானின் கருத்துக்கு பா.ஜனதா எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடிக்கக்கூடாது

சியட் டயர் உற்பத்தி நிறுவனம், தனது தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஒரு வீடியோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் நடித்துள்ள இந்தி நடிகர் அமீர்கான், பொதுமக்கள் தெருவில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. 

இதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனந்த் வர்தன் கோயங்காவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் தங்கள் நிறுவன விளம்பரத்தில், இந்துக்களின் உணர்வுகள் புண்படும்படி காட்சி இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் உங்கள் நிறுவனம், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் என்று நம்புகிறேன். தெருக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று நடிகர் அமீர்கான் அந்த காட்சியில் கூறுகிறார். இது நல்ல செய்தி. உங்களின் இந்த பொது நலன் சார்ந்த விஷயம் பாராட்டுக்குரியது.

பொதுமக்களுக்கு இடையூறு

மேலும் ஒரு பிரச்சினையை பொதுமக்கள் தெருக்களில் எதிர்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் நமாஸ் என்ற பெயரில் சாலைகளை மறிப்பதால் பொதுமக்கள் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள். இது இந்திய நகரங்களில் வழக்கமாக நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சிக்கி பெரும் பாதிப்புற்கு ஆளாகின்றன.

தர்காக்கள் மீது வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் பிரார்த்தனை (அசன்) செய்யப்படுகிறது. இதனால் அதிக ஒலி வெளியாகி நோயாளிகள், ஓய்வு எடுப்பவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இடையூறு ஏற்படுவதுடன் ஒலி மாசு உண்டாகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒலி அதிகமாக வெளியேற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை நாட்களில் இது அதிக நேரம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

அநீதியை அறிவீர்கள்

பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தடுக்க நீங்கள் தீவிரமாக கவனம் செலுத்துகிறீர்கள். நீங்களும் இந்து மதத்தை சேர்ந்தவர் தான். ஆண்டாண்டு காலமாக இந்துக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை நீங்கள் அறிவீர்கள். சமீபகாலமாக இந்து அல்லாத நடிகர்கள், எப்போதும் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார்கள். 

அதே நேரத்தில் அவர்கள் சார்ந்த மதத்தினர் செய்யும் தவறுகளை வெளிப்படுத்துவதே இல்லை. எந்த நிலையிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்