லாரி கவிழ்ந்து கால்வாய் தண்ணீரில் விழுந்த நெல்மூடைகள்
மேலூர் அருகேலாரி கவிழ்ந்து கால்வாய் தண்ணீரில் நெல்மூடைகள் விழுந்து சேதமானது.
மேலூர்,
மேலூர் அருகே மதுரை நான்குவழி சாலையில் சூரக்குண்டு விலக்கில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.அந்த இடத்தில் தற்போது உள்ள சாலையின் இருபக்கமும் தற்காலிக சாலைகள் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளன. தற்போது ஒரே ஒரு பகுதி வழியாக தான் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எதிர்எதிரே வாகனங்கள் செல்வதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று மதியம் வந்து கொண்டு இருந்தது. அந்த லாரி மேலூர் அருகே சூரக்குண்டு விலக்கில் வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் லாரி நிலைத்தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. சாலையையொட்டி கால்வாய் சென்றதால் லாரியில் இருந்த நெல் மூடைகள் சிதறி கால்வாய் தண்ணீரில் விழுந்தன. இதனால் கால்வாய் தண்ணீரில் நெல் மூடைகள் நனைந்து சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் ஒரே சாலை வழியாக தான் இருபுறமும் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. பாலம் கட்டும் பணி காரணமாக தாழ்வான பகுதி வழியாக வாகனங்கள் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. பாலம் வேலை நடைபெறுகிறது என்பது பற்றி எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. இது இல்லாதது கூட விபத்துக்கு ஒரு காரணம். எனவே விபத்தை தடுக்க எச்சரிக்கை பலகை ைவக்க வேண்டும் என்றனர்.