சாலையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: வாலிபர் கீழே தள்ளிவிட்டதில் தனியார் நிறுவன காவலாளி சாவு
கல்லாவி அருகே சாலையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கீழே தள்ளி விட்டதில் தனியார் நிறுவன காவலாளி இறந்து விட்டார்.
ஊத்தங்கரை:
கல்லாவி அருகே சாலையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கீழே தள்ளி விட்டதில் தனியார் நிறுவன காவலாளி இறந்து விட்டார்.
வாக்குவாதம்
கல்லாவி அருகே உள்ள மேட்டு சூளக்கரையை சேர்ந்தவர் கேசவன் (வயது 52). இவர் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மேட்டு சூளக்கரை பஸ் நிறுத்தம் அருகில் மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அறிவு என்கிற தம்பிதுரை (30) என்பவர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது கேசவன் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அவர் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்த அறிவுவிடம் ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தள்ளி விட்டதில் சாவு
இதில் அறிவு கேசவனை கையால் தாக்கி கீழே தள்ளி விட்டார். இதில் காயம் அடைந்த கேசவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கேசவன் இறந்து விட்டார்.
இது குறித்து இறந்து போன கேசவனின் மகள் அன்பு நிலா, கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரித்து, கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் 304 (2) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.