ஓசூர் அருகே டிப்பர் லாரியில் திடீர் தீ
ஓசூர் அருகே டிப்பர் லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள புக்கசாகரத்தில் இருந்து ஓசூர் நோக்கி நேற்று மாலை டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டது. சிறிது தூரம் வந்தவுடன் அந்த லாரி நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர், வண்டியில் இருந்து கீழே குதித்து தப்பியோடி விட்டார். இந்த நிலையில், தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.