பணியின்போது வீரமரணமடைந்த போலீசாருக்கு மரியாதை
பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரியலூர்,
பணியின்போது உயிர் நீத்த போலீசாருக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி
அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, துணை சூப்பிரண்டு மதன் மற்றும் உயிர் நீத்த போலீசாரின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வீர மரணம் அடைந்த 377 போலீசாருக்கு 3 சுற்றுகளாக 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். முன்னதாக புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.