கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு

தொடர்மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-10-21 17:49 GMT
கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த அணைமூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த அணையில் இருந்து கடந்த ஆண்டு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் மீன் வளர்ப்புக்காக 25 அடி வரை தண்ணீர் அப்படியே அணையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கல்வராயன்மலையில் பரவலாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகள் வழியாக  அணைக்கு கடந்த 2 வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

விரைவில் திறப்பு

 இதன் காரணமாக அணையி்ன் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து தற்போது 41 அடியை எட்டியுள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அணை விரைவில் நிரம்ப உள்ளதால், அதில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தண்ணீர் சீராக செல்ல பாசன வாய்க்கால்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்