கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்ற கடைக்கு சீல்
கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்ற கடைக்கு சீல்
கோவை
கோவையில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் "சீல்" வைக்கப்பட்டது.
ஐஸ்கிரீம் கடை
கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு அருகே "ரோலிங் டப் கபே" என்ற ஐஸ்கிரீம் கடை உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக வந்து செல்லும் இந்த கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு புகார் சென்றது.
இதையடுத்து அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்ய மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் மோகன்தாஸ், நரசிம்மன், கோவிந்தராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
மதுபானம் கலந்து விற்பனை
அந்த கடையில் ஐஸ்கிரீமில் ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மதுவகைகளை கலந்து தயாரித்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அங்குள்ள உணவு விற்பனை பட்டியலிலும் மது கலந்த ஐஸ்கிரீம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுபாட்டில்கள்
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடையில் உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டன. காலாவதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. ஆய்வின்போது உணவு கையாளுபவர்களிடம் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை.
உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப் பட்டது. முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படவில்லை.
உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம் தலையுறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.
கடைக்கு சீல்
மேலும் போதை தரும் வஸ்துக்களை உணவு பொருளில் கலக்க கூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதுபோன்ற போதை ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மூளை பாதிக்கும். இதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே மது கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த காரணத்தால் "ரோலிங் டப் கபே" என்ற ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.