பித்தளை செம்பில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ 27 லட்சம் மோசடி செய்த 6 பேர் கைது

பித்தளை செம்பில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ 27 லட்சம் மோசடி செய்த 6 பேர் கைது

Update: 2021-10-21 17:07 GMT
கோவை

பித்தளை செம்பில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 90 லட்சத்திற்கு கத்தை, கத்தையாய் கள்ள நோட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரிடியம்

கோவையை சேர்ந்த முருகேசன் (வயது 36), திருப்பூரை சேர்ந்த ராஜ் என்கிற போஜராஜ் (42), ராணிபேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் (34), சூர்யகுமார் (24) ஆகிய 4 பேரும் தங்களிடம் இரிடியம் உள்ள செம்பு இருப்பதாக கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மகரூப், அப்துல்கலாம் ஆகியோரிடம் கூறி உள்ளனர்.

இந்த செம்பை ஆதிவாசி ஒருவர் வைத்து உள்ளதாகவும், இந்த செம்பு ரூ.500 கோடிக்கு மேல் விற்க முடியும் என்றும், இந்த செம்பில் இரிடியம் உள்ளது என்பதை நிரூபிக்க பல்வேறு சோதனைகள் செய்யப்பட வேண்டியது உள்ளது என்பதால் இதற்காக நவீன கவச உடைகள், சோதனை கருவிகள் வாங்க வேண்டியது உள்ளது. இதற்கு ரூ.30 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.

ரூ.27 லட்சம் கொடுத்தனர் 

இந்த பணத்தை நீங்கள் 2 பேரும் கொடுத்தால், இரியம் உள்ள செம்பை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து ரூ.3 கோடி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினார்கள். 

இதனை நம்பிய மகரூப், அப்துல்கலாம் ஆகிய 2 பேரும் கடந்த 2 மாதங்களில் 3 கட்டங்களாக முறையே ரூ.7½ லட்சம் ரூ.17 லட்சம், ரூ.2½ லட்சம் என மொத்தம் ரூ.27 லட்சம் கொடுத்து உள்ளனர். 

ஆனால் அவர்கள் கூறியபடி இடிரியத்தை விற்று ரூ.3 கோடியை கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் 2 பேரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரக்கோரி அவர்களிடம் கேட்டனர். 

இதையடுத்து அந்த கும்பல் 2 பேரிடம் பணத்தை பெற்றுக்கொள்ள கோவை அருகே உள்ள ஒத்தகால்மண்டபத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வருமாறு கூறினார் கள். 

பரிசோதனை

இதையடுத்து  2 பேரும் ஒத்தக்கால்மண்டபத்துக்கு அவர்கள் கூறிய வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த அந்த கும்பலை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் கவச உடை அணிந்து கொண்டு தான் ஒரு விஞ்ஞானி என்று அறிமுகம் செய்து கொண்டார். 

பின்னர் அவர் ஒரு செம்பை பரிசோதனை செய்து, அதில் இரிடியம் உள்ள என்றும் ரூ.2 ஆயிரம் கோடி வரை விற்பனையாகும் என்று தெரிவித்து உள்ளார். 

ஆனால் அவரின் நடவடிக்கையில் மகரூப், அப்துல்கலாம் ஆகிய 2 பேருக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் தங்களுக்கு இரிடியம் உள்ள செம்பு வேண்டாம், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டு உள்ளனர். 

கள்ள நோட்டுகளை கொடுத்தனர் 

மேலும் இது இரிடியம்தான் என்பதற்கான கலெக்டரின் சான்றிதழை காண்பிக்கும்படி கூறி உள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து அந்த கும்பல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்த ஒரு கட்டு, மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 6 கட்டுகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தனர்.

உடனே அவர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்தபோது, அது கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனால் 2 பேரும் சேர்ந்து கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற பார்க்கிறீர்களா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்த முருகேசன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்கள் 2 பேரையும் குத்த முயன்றார். 

இதில் தப்பித்த அவர்கள் 2 பேரும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்தை சந்தித்து, தங்களை ஒரு கும்பல் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, உதவி சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆறுமுகநயினார், மியாடிட் மனோ, செந்தில் தலைமை காவலர் ராமசாமி, செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

6 பேர் கைது 

பின்னர் அவர்கள் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கு இருந்த தினேஷ்குமார், ராஜ் என்கிற போஜராஜ், முருகேசன், சூர்யகுமார், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் கத்தை, கத்தையாக இருந்த 90 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் அவர்கள் பயன்படுத்திய கவச உடை, கத்தி, இரிடியம் இருப்பதாக கூறிய பித்தளை செம்பு, ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2 கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்