தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது மோதல், கைகலப்பு
தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது மோதல், கைகலப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி, புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல்
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல், நாசரேத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் எஸ்.டி.கே.ராஜன் அணியினருக்கும், டி.எஸ்.எப். அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது.
இதில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கமிட்டி உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் இரு தரப்பிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.
பரபரப்பு
தொடர்ந்து நேற்று டி.எஸ்.எப். அணியினர் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்கு இல்ைல என கூறப்படுகிறது.
எனவே நிர்வாகிகள், அலுவலக வாசலில் அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம், திருமண்டல அலுவலகத்தை திறக்குமாறு கூறினர். அதற்கு அவர், பிஷப் வந்தால்தான் அலுவலகத்தை திறக்க முடியும் என்று கூறினார். இதனால் அங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு நிலவியது.
கைகலப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எதிர் அணியினரும் அங்கு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கும், டி.எஸ்.எப். அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.
அப்போது லேசான கைகலப்பும் நடந்தது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
`சீல்' வைப்பு
பின்னர் நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து பூட்டி `சீல்' வைத்தனர். தொடர்ந்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்து விட்டனர்.
இதனையடுத்து அவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலை வரை அமர்ந்து இருந்தனர்.
தேவையற்ற குற்றச்சாட்டு
பின்னர் திருமண்டல லே செயலாளராக தேர்வானதாக கூறப்படும் டி.எஸ்.எப். அணியைச் சேர்ந்த நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி அமோகமாகவும் முழுமையாகவும் வெற்றி பெற்றது. எங்கள் அணி வெற்றி பெற்றதால், தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனர். பிஷப்பைக்கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உப தலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம், என்று கூறினார்.
----------------