கும்கிகளுடன் வனத்துறையினர் ரோந்து

விநாயகன் யானை ஊருக்குள் வருவதை தடுக்க கும்கிகளுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-21 14:32 GMT
கூடலூர்

விநாயகன் யானை ஊருக்குள் வருவதை தடுக்க கும்கிகளுடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

விநாயகன் யானை அட்டகாசம்

கோவையில் அட்டகாசம் செய்த விநாயகன் என்ற காட்டுயானையை வனத்துறையினர் பிடித்து, முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அந்த யானை தினமும் கூடலூர்- முதுமலை எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. சமீபத்தில் ஓடக்கொல்லி பகுதியில் லீலா என்பவரது வீட்டை அந்த யானை உடைத்தது. மேலும் விவசாய பயிர்களை நாசம் செய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோழிகண்டி பகுதியை சேர்ந்த வாசு என்பவரது வயலில் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.
 
போராட்ட அறிவிப்பு

இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானையை விரட்டினர். பின்னர் கரிக்கணக்கொல்லி, போலீஸ்மட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு விநாயகன் யானை சென்றது. 

இதனால் அங்குள்ள மக்கள், விவசாயிகள் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்தனர். அந்த யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

கும்கிகள் வரவழைப்பு

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சங்கர், கிருஷ்ணா என்ற 2 கும்கி யானைகள் நேற்று காலை 10 மணிக்கு கூடலூருக்கு வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விநாயகன் யானை வரும் கிராம பகுதிகளில் கும்கி யானைகளுடன் ரோந்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கும்கி யானைகள் கிராம பகுதிகளில் முகாமிட்டு உள்ளதை உணரும் சமயத்தில் விநாயகன் யானை ஊருக்குள் வராது. இதனால் அது ஊருக்குள் வருவது தடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்